அதிமுக சட்டப்படி பொதுக்குழுவுக்கு அதிகாரமுண்டு !சின்னத்தை முடக்க முடியாது -இபிஎஸ் ஆதரவாளர் இன்பதுரை

ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்லிவரும் நிலையில் பொதுக்குழுவிற்கு அதிகாரம் உண்டு என்கிறார் அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இன்பதுரை. எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பின்னர் அவர் வீட்டு வாசலில் நின்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் .
ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது . அதையும் மீறி கொண்டு வந்தால் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்படும். அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்படும் நிலை வரலாம் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் பதவிக்காலம் நான்காண்டு காலம் இருக்கிறது. அதற்குள் இடையில் நீக்க முடியாது என்றெல்லாம் தனது ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பன்னீர்செல்வம் .
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இன்பதுரை. அவர், கழகத்தை வழி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக் குழு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை 5 ஆண்டுகளுக்கானது என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. கழகத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவிகளும் 5 ஆண்டு பதவி காலம் தான். ஆனால் இடையில் அவர்களை நீக்குவதில்லையா?மாற்றுதுவது இல்லையா?அது போலதான் கழகத்தின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் மாற்றுவதற்கு உரிமை உள்ளது என்கிறார்.
அவர் மேலும் அது குறித்து, யாரையும் 5 வருடத்திற்குள் அசைக்க முடியாது என்பதெல்லாம் கிடையாது என்கிறார். அதிமுகவுக்கு என்ற சட்ட புத்தகம் உள்ளது. அந்த சட்ட புத்தகத்தில் பொதுக்குழுவுக்கு தான் உயர்ந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறது . தேர்தல் ஆணையத்திற்கு சென்றால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவர் ஆக்கிக்கொள்ளுங்கள் . அதற்கான கட்சி விதிகளை காட்டுங்கள் என்று மட்டும் தான் கேட்பார்கள் . அதனால் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு சட்ட விதிகளில் இடம் இருக்கிறது . நீதிமன்றத்திற்கு போவோம் சின்னத்தை முடக்குவோம் என்று சிலர் சொல்கிறார்கள் . அதிமுகவுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி நடந்து கொண்டிருக்கிறீர்களா? என்று தான் நீதிமன்றம் பார்க்கும். அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு தான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.