நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ்! அதிமுகவின் முக்கோண ஆலோசனை கூட்டம்

 
ய்

ஒரே கோணத்தில் நடைபெறவேண்டிய அதிமுக ஆலோசனை கூட்டம் ‘ஒற்றை தலைமை’ விவகாரத்தினால்  முக்கோண ஆலோசனை கூட்டம் நடந்து வருவது அதிமுகவில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வரும் 23 ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த கடந்த 14ஆம் தேதியன்று தலைமை கழகத்தில் மா.செ.க்கள் கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க,  எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அந்த குரலை எழுப்ப,  பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர், 

ப்ஃப்

 இந்த ஒற்றை தலைமை தீர்மானத்தின் மூலம் தன்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துவிட்டார் என்பதை உணர்ந்த பன்னீர்செல்வம், எடப்பாடியின் சதித்திட்டத்தை எப்படி முறியடிப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 அதிமுகவின் கடந்த ஆண்டு நடந்த செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி ஒற்றை தலைமை தீர்மானத்தினை பொதுக்குழுவில் கொண்டுவர அதிகாரம் இல்லை. அப்படி கொண்டுவந்தாலும் அது சட்டப்படி செல்லாது என்று பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் சொல்லி விட்ட நிலையிலும் கூட பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் , எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.   அதே நேரம்,  அதிமுக தீர்மானக்குழு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய  தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ப்க்

 நேற்று முன்தினம் தலைமை கழகத்தில் அதிமுக தீர்மான குழு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது,  பன்னீர் செல்வமும் அங்கு புறப்பட்டுச் சென்றார். அவர் வருகிறார் என்று தெரிந்ததும் அதிமுக தீர்மான  குழுவில் இருந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஜெயக்குமார்,  சி.வி. சண்முகம்,  வளர்மதி ஆகியோர் பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்த்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார்கள்.  அதன் பின்னர் பன்னீர்செல்வம் தலைமை கழகம் வந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றார்.  அதற்குப் பின்னர் வழக்கம்போல் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பன்னீர்செல்வம்.

 இந்த நிலையில் இன்றைக்கு தலைமை கழகத்தில் அதிமுக தீர்மான குழு மீண்டும் கூடி,  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறது.  எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.   நேற்று வரைக்கும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவந்த பன்னீர்செல்வம்,  இன்று நட்சத்திர ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.   இதற்காக தனது ஆதரவு  மா.செ.க்களை சென்னைக்கு வர அழைப்பு விடுத்திருக்கிறார்.  சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது .  

ஒரே கோணத்தில் நடைபெறவேண்டிய அதிமுக ஆலோசனை கூட்டம் ஒற்றை தலைமை விவகாரத்தால் இப்படி முக்கோணமாக  நடந்து வருவது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.