’’அதிமுக சினிமா! பாஜகவின் இயக்கத்தில் நன்றாக நடிக்கிறார்கள்’’

அதிமுக என்கிற திரைப்படத்தை இயக்குகிறது பாஜக. அந்த இயக்கத்திற்கு ஏற்றார் போல் அதிமுகவினர் நன்றாக நடித்து வருகிறார்கள் என்று விமர்சித்துள்ளார் முத்தரசன்.
அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையே நடக்கும் மோதலுக்கு காரணம் பாஜக தான் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இந்த மோதலின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் . குறிப்பாக ஓ. பன்னீர் செல்வத்தை பாஜக இயக்குகிறது என்று சொல்லி வருகின்றனர் .
திராவிடர் விடுதலை கழக தலைவர் கி. வீரமணி கூட, அதிமுகவில் ஒற்றைத் தலைமையா இரட்டைத் தலைமையா முக்கோண தலைமையா என்ற போட்டோ போட்டியை அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் டெல்லியில் அடமானம் வைத்திருக்கும் அதிமுகவை மீட்டெடுங்கள் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவின் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், அதிமுகவின் உக்கட்சி பூசலுக்கு பாஜக தான் காரணம். அதிமுக என்கிற திரைப்படத்தினை பாஜக இயக்குகிறது. இவர்களும் அந்த இயக்கத்திற்கு ஏற்றார் போல் நன்றாக நடித்து வருகின்றார்கள் என்று விமர்சித்திருக்கிறார்.