ஜூன் 23ஆம் தேதி நடந்தது பொதுக்குழுவே இல்லை; நாடகம் - வைத்திலிங்கம்
ஜூன் 23ஆம் தேதி நடந்தது பொதுக்குழுவே இல்லை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "தமிழ் மகன் உசேன் அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து தான் அவை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நடந்த பொதுக்குழு சட்ட ரீதியாகவும் நடக்கவில்லை. அதில் ஒருங்கிணைப்பாளர் முன்மொழியும் இல்லை, வழிமொழியும் இல்லை. அன்றைக்கு நடந்தது பொதுக்குழுவே இல்லை, நாடகம். நாளைக்கு வரக்கூடிய அவமதிப்பு வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதை சந்திக்க தயார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது.
உச்ச நீதிமன்றத்திற்கு ஈபிஎஸ் தரப்பினர் சென்றுள்ளனர். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" என கூறினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.