"நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. ஆனால் ஆளுநருக்கும் ஆதரவு" - சர்ச்சையாகும் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு!

நீட் தேர்வு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மாநில உரிமைகளுக்காக கடைசி மூச்சு வரை போராடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பியனுப்பியுள்ளார். இது எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களின் பிரதிநிதிகள் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவை ஒரு ஆளுநர் நிராகரித்திருப்பது அரசியல் காரணங்களின்றி வேறில்லை என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுவும் இதனை திருப்பியனுப்ப ஆளுநர் எடுத்துக்கொண்ட காலம் 143 நாட்கள். அதற்கு ஏன் இவ்வளவு நாள் கிடப்பில் போட வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது. இச்சூழலில் இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசிய கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பாஜக புறக்கணிப்பதாக அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக அதிமுகவும் புறக்கணித்தது.
இதற்கு பின்னால் இருப்பது பாஜக தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பின் எதற்கு அதிமுக புறக்கணித்தது? யார் சொல்லி புறக்கணித்தார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற ஆதரவளித்த அதிமுக ஏன் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும், யாரை திருப்திப்படுத்த புறக்கணித்தார்கள் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழ, ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம் எழுதினார். அதில், "அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
எனவே "நீட் தேர்வு ரத்து" தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், "அதிமுகவை பொறுத்தவரையில், நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை, அதிமுக உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.
இந்த நீட் தேர்வை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின்படி, ஓர் ஆளுநராக ஆற்ற வேண்டிய பணியை தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்” என்றார். ஆளுநரை அனைவரும் விமர்சனம் செய்து கொண்டிருக்கையில், ஓபிஎஸ் ஆளுநரை பாராட்டி பேசியிருக்கிறார். ஆனால் நீட் விலக்குக்கும் ஆதரவு தெரிவிக்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் என்ற கேள்வியெழுந்துள்ளது.