அரசியலில் இனி நாங்கள் தான் ஹீரோ- வைத்திலிங்கம்
அரசியலில் நாங்கள் ஜீரோ என சிலர் விமர்சித்தனர், ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமர்வு, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்துள்ளதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், வைத்திலிங்கம் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானம், ஓபிஎஸ் உட்பட ஆதரவாளர்களை நீக்கிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையின் போது ரத்து செய்யும் என நம்புகிறோம். மேலும், அரசியலில் நாங்கள் ஜீரோ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ” என தெரிவித்தார்.