"டைம் வேஸ்ட்... துருவி துருவி பாத்தும் ஒன்னும் இல்ல" - சமூகநீதி கூட்டமைப்பை புறக்கணித்தது அதிமுக!
குடியரசு தினத்தன்று ஜனவரி 26ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும்” என அறிவித்தார். மேலும் இதில் இணையுமாறு அகில இந்திய அளவில் 38 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு கடிதம் ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்.
அதில், "தனித்தன்மைமிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆன நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்
தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியது அல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சூழலில் இதில் இணைய விருப்பமில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துக்களை உடையவர்களை அழைத்துப் பேசி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக உள்ளது. சமூகநீதி என்றாலே மக்களின் நினைவிற்கு உடனடியாக வருவது அதிமுகவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் தான்.
2/2 pic.twitter.com/xnNu8bVyjg
— AIADMK (@AIADMKOfficial) February 5, 2022
2/2 pic.twitter.com/xnNu8bVyjg
— AIADMK (@AIADMKOfficial) February 5, 2022
தமிழ்நாட்டின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அதிமுக தயங்காது. தங்களுடைய கடிதத்தில் தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதாவது இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தபோது, அதுபோன்ற எதுவும் இல்லை என்பதும், அரசியல் ஆதாயம்தான் மேலோங்கி இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து, நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.