அனைவரும் சேர்ந்து ஈபிஎஸ்-ஐ ஒழித்துக்கட்டிவிடுவோம்- மனோஜ் பாண்டியன்
ஓபிஎஸ் ஒரு வார்த்தை சொன்னால் அதிமுகவில் ஈபிஎஸ் அணியே இருக்காது என ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், கு.பகிருஷ்ணன், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிடலாம். எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, ஓபிஎஸ்ஸிடம் இருப்பது தொண்டர் படை. அதிமுகவுக்கு தற்போது பிடித்துள்ள நோய் எடப்பாடி பழனிசாமி. இதற்கான மருந்து பன்னீர்செல்வம்தான். அதிமுகவை ஒன்றிணைப்போம். ஒன்றிணைய மறுக்கும் எடப்பாடி பழனிசாமியை கழித்துவிடுவோம். எனக்கு ஒரு ஆசை இருக்கு. ஓபிஎஸ் ஆட்சிக்குவந்த பிறகு கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும். விசாரித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும்.ஓபிஎஸ் ஒரு வார்த்தை சொன்னால் அதிமுகவில் ஈபிஎஸ் அணியே இருக்காது” எனக் கூறினார்.