“பாஜகவிடம் கேட்டு ஓபிஎஸ் ஆளுநர் பதவி வாங்கிக்கலாம்”
பாஜகவிடம் கேட்டு ஓபிஎஸ் மேகாலயா திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக சென்றுவிடலாம் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு அதிமுக மேலூர் நகர் கழகம் சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, “ஓபிஎஸ் அதிமுகவில் இருப்பதாக அதிமுகவினருக்கு இடையூறு செய்யாமல் பாஜக மேல் இடத்தில் கேட்டு மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக சென்று 500 ஏக்கரில் அமைதியாக வாழலாம். அவ்வாறு செய்வதன் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கலாம்.மேலும் புதிய பதவிகள் வழங்குகிறோம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் கட்சியில் இல்லாத பலருக்கும் ஓபிஎஸ் அணியில் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது” என விமர்சித்தார்.