அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை- சிவி சண்முகம்
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், செப்டம்பர் 5ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரியிருந்தார் ஓ.பி.எஸ். ஒ.பன்னீர் செல்வத்தின் மனு இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷண முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் மற்றும் வைடு முத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ண குமார் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி என்பது இன்னும் காலாவதியாகவில்லை.
ஓ.பன்னீர் செல்வம் தான் இப்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அ.தி.மு.க கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஜீலை 11-ந்தேதி அ.தி.மு.க வின் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். கட்சியின் நிர்வாகம் என்பது கட்சி விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் இன்னும் நீடிப்பதால் தான் தான் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர். இது அனைத்தையும் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் பிறப்பித்த உத்தரவின் படி தான் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார். கட்சி யின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்காத ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு செல்லும் என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்பளித்துள்ளது. எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
எடப்பாடி கே.பழனிச்சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் 95% கட்சியினரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது என 2 - நீதிபதிகள் தீர்ப்பிற்கு தடை விதிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்து கட்சியில் ஒரு கட்சியில் ஒரு தலைமை குருப்பது தான் நல்லது என்றும் கருத்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு முடியும் வரை நடத்தமாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் உறுதிமொழியை பெற்றுக் கொண்ட நீதிபதிகள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் வழக்கை நவம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்கள். இந்த தடை உத்தரவின் மூலம் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை நடத்தி அ.தி.மு.க வின் முழு நேர பொதுச் செயலாளர் ஆக தற்போது முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ளாரா? ராஜினாமா செய்தாரா? என சிவில் நீதிமன்றத்திற்கு சென்று தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. அதிமுக வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தபிறகே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உறுதி அளித்தோம்” எனக் கூறினார்.