ஏசி ரூம், ஏசி கார்னு மாறிட்ட மடாதிபதிகள் பல்லக்கை விடாமல் பிடித்து தொங்குவது ஏன்? பழ.நெடுமாறன்

 
ப்

தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம் . இந்த மடம் 16ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இம்மடத்தில் ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில்  உள்ளார். 

ட்

2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான  ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம்.  இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர்  பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.  அதே நேரம் பட்டின பிரவேச தடைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இதுகுறித்து, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  அவர்,   ’’பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் என சொல்லும் மடாதிபதிகள்,  தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தி இருக்கிறார்கள்.  குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பவனி வருகிறார்கள்.   தொலைபேசி,  கைபேசி, கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? என்று கேட்கிறார்.

 பக்தர்களுக்கு அருள் உரையாற்றும்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மடாதிபதிகள் பயன்படுத்தும்போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

 மடாதிபதிகள் யாராக இருந்தாலும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை விட்டு விட்டு ஒத்து  வாழவேண்டும்.   இல்லையென்றால் மக்கள் புறக்கணித்து வைக்கப்படுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.