குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி.. அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜ்கோட் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்...
குஜராத்தின் ராஜ்கோட்டில் நாளை ஆம் ஆத்மி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுவார் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
குஜராத்தில் தற்போது முதல்வர் புபேந்தர் படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் தடம் பதிக்க விரும்புகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்ததால், குஜராத்திலும் மக்களின் ஆதரவை பெற்று விடலாம் என ஆம் ஆத்மி கணக்கு போடுகிறது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி குஜராத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான், குஜராத்தில் பருச் மாவட்டத்தில் உள்ள சந்தேரியா கிராமத்தில் பழங்குடியினர் கூட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சென்று இருந்தார்.
இந்நிலையில் மே 11ம் தேதியன்று (நாளை) அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார். அன்றைய தினம் ராஜ்கோட்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மே 11ம் தேதியன்று ராஜ்கோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார். அவரது குஜராத் பயணத்தின் விரிவான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.