பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை தோல்வி, பா.ஜ.க.வால் எங்களை உடைக்க முடியாது... ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ்

 
சவுரப் பரத்வாஜ்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெஜ்ரிவால் கூட்டத்தில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு, பா.ஜ.க.வின் ஆபரேஷன் தோல்வியடைந்தது மற்றும் பா.ஜ.க.வால் எங்களை உடைக்க முடியாது என்று ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ரெய்டுகள் போன்ற தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் டெல்லி அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சிப்பதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து விவாதிக்க நேற்று காலை 11 மணிக்கு தனது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்துக்குஅரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து இதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கலாம் என கூறப்பட்டது.

பா.ஜ.க.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்த கூட்டத்தில்  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 53 பேர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்துள்ளது.  முதல்வர் கெஜ்ரிவால் மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் (கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்) தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பதாக கெஜ்ரிவாலிடம் தெரிவித்தனர் என தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகு சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். தகவல்களின் அடிப்படையில் உள்ளது. சோதனையின்  போது எதுவும் மீட்கப்படவில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜ.க. நான்கு எம்.எல்.ஏ.க்களை அணுகி அவர்களுக்கு தலா ரூ.20 கோடி வழங்க முன்வந்தது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க முடியாத எம்.எல்.ஏ.க்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பா.ஜ.க.வால் எங்களை உடைக்க முடியாது, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள், கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.