டெல்லி மாநகராட்சிகளை ஒன்றாக இணைத்தாலும், தேர்தலில் தோல்வியை பா.ஜ.க.வால் தவிர்க்க முடியாது.. ஆம் ஆத்மி

 
ஆம் ஆத்மி

டெல்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைத்தாலும், மாநகராட்சி தேர்தலில் தோல்வியை தவிர்ப்பது பா.ஜ.க.வால் சாத்தியமற்றது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஜப்பானின் டோக்கியோ மாநகராட்சிக்கு பிறகு இரண்டாவது பெரிய மாநகராட்சியாக இருந்த டெல்லி மாநகராட்சி விளங்கியது. இந்நிலையில் கடந்த 2012 ஜனவரியில் டெல்லி மாநகராட்சி, தெற்க டெல்லி மாநகராட்சி, வடக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சியின் பிராந்திய பிரிவுகள் மற்றும் வருவாய் ஈட்டும் சாத்தியக் கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநகராட்சியின் 3 பிரிவுகளும் சீரற்றதாக இருந்தது. மேலும் காலப்போக்கில் 3 மாநகராட்சிகளின் நிதி சிக்கல்களை அதிகரித்தது, மாநகராட்சிகளின் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் திணறி வருகின்றன.

மத்திய அரசு

இதனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதேசமயம் 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழ்நிலையில்,  நேற்று டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து ஆம் ஆத்மி டிவிட்டரில், 3 மாநகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றலாம் என்று ஊழல் பா.ஜ.க. நினைத்தால். டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பா.ஜ.க.வின் தவறான எண்ணங்களை மாநகராட்சி தேர்தலில் விரைவில் அகற்றுவார்கள். மாநகராட்சி தேர்தலில் தோல்வியை தவிர்ப்பது பா.ஜ.க.வால் சாத்தியமற்றது என்று பதிவு செய்துள்ளது.