மின் கட்டண பாக்கி தள்ளுபடி.. குஜராத் மக்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி

 
வீடுகளுக்கு இலவச மின்சாரம்

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், கடந்த டிசம்பர் வரையிலான மின் கட்டண பாக்கி தள்ளுபடி செய்யப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

குஜராத்தில் தற்போது முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்ற விரும்புகிறது.

ஆம் ஆத்மி

தேசிய கட்சியாக உருவெடுக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி, குஜராத் சட்டப்பேரவை தேர்தலை அதற்கான ஒரு சரியான வாய்ப்பாக கருதுகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்று ஆம் ஆத்மி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவால்

அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம். அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வோம். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், 2021 டிசம்பர் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.