தொண்டர்கள் பணம் கேட்க தொடங்கியதுதான் நான் வேட்புமனுவை திரும்ப பெற காரணம்.. ஆம் ஆத்மியின் ஜாரிவாலா விளக்கம்

 
காஞ்சன் ஜாரிவாலா

சூரத் (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் பணம் கேட்க தொடங்கினர். இதுதான் நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான காரணம் என்று ஆம் ஆத்மி வேட்பாளர் காஞ்சன் ஜாரிவாலா தெரிவித்தார்.

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மொத்தம்  2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சூரத் உள்பட 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் கடந்த திங்கட்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

சூரத் (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட காஞ்சன் ஜாரிவாலா வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று காஞ்சன் ஜாரிவாலா தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் காஞ்சன் ஜாரிவாலாவை அவரை குடும்பத்துடன் கடத்தி சென்று வேட்புமனுவை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.

ஆனால் காஞ்சன் ஜாரிவாலா அதனை மறுத்ததோடு, நான் வேட்பு மனு திரும்ப காரணம் கட்சி தொண்டர்கள் தான் காரணம் என்று  தெரிவித்தார். இது தொடர்பாக காஞ்சன் ஜாரிவாலா கூறியதாவது: ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவழிக்கும் திறன் எனக்கு இல்லை. சூரத் (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் பணம் கேட்க தொடங்கினர். இதுதான் நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான காரணம். கட்சியில் இருந்து பல அழுத்தம் கொடுக்கப்பட்டது. மக்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைத்து தொந்தரவு செய்தனர். நான் என் மகனின் நண்பர்களுடன் சென்றேன். பா.ஜ.க.வில் இருந்து யாரும் இல்லை. நான் இப்போது என்ன செய்ய வேண்டும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு பிறகு சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.