மணிஷ் சிசோடியா ஒரு நேர்மையான கல்வி அமைச்சர், அவரை மத்திய அரசு துன்புறுத்துகிறது.. ஆம் ஆத்மி எம்.பி.
மணிஷ் சிசோடியாக ஒரு நேர்மையான கல்வி அமைச்சர், அவரை மத்திய அரசு துன்புறுத்துகிறது என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் புதிய கலால் கொள்கை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். மேலும், டெல்லி மாநில துணை முதல்வரும், கலால் துறையின் அமைச்சருமான மணிஷ் சிசோடியா மீது துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனையடுத்து மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது: மணிஷ் சிசோடியா ஒரு நேர்மையான கல்வி அமைச்சர். டெல்லியில் 18 லட்சம் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அவர் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்து வருகிறார்.
தினமும் அவரை துன்புறுத்துவதும், அவர் மீது பொய் வழக்குகள் போடுவதும் ஒரு மாநில அரசின் செயல்பாட்டில் இடையூறுகளை உருவாக்கும் முயற்சியாகும். மத்திய அரசு எங்கள் மீது தீய எண்ணத்தை கொண்டுள்ளது. எங்களுக்கு எதிராக மத்திய அரசு தீங்கிழைக்கும் விதம் மற்றும் எங்களுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தப்படும் விதம், மாநில அரசின் அமைச்சர்களை துன்புறுத்த அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்துவது சரியல்ல என்று மாநிலங்களவையில் விதி 267ன் கீழ் நோட்டீஸ் கொடுத்தேன். அவையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.