நாட்டை எப்படி ஆள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.. ஹரியானா அமைச்சருக்கு பதிலடி கொடுத்த ஆம் ஆத்மி

 
ஆம் ஆத்மி

இந்த அமைச்சர்களை போல் ஊழல் செய்வதை விடுத்து, நாட்டை எப்படி ஆள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஹரியானா அமைச்சருக்கு பஞ்சாபின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்தார்.

ஹரியானா மின்சார துறை அமைச்சர் ரஞ்சித் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். பஞ்சாப் அரசு குறித்து ரஞ்சித் சிங் கூறியதாவது: பஞ்சாபின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.  ஆம் ஆத்மி  அரசு அமைச்சர்கள் அனுபவமற்றவர்கள், யாரும் முன் அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கவில்லை. 90 சதவீதம் பேர் இதுவரை சட்டப்பேரவையை பார்த்ததே இல்லை. அவர்களில் சிலர் மொபைல் பழுது பார்த்தனர், சிலர் ஆட்டோ ஓட்டுனர்கள். 

ரஞ்சித் சிங்

செவிலியர்கள், போலீஸ்காரர்கள் கூட பயிற்சியில் ( முதலில் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பிறகுதான் பணியில்) ஈடுபடுகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஆட்சியை நடத்துவதில் பெரும் பொறுப்பு உள்ளது. நிர்வாகம் என்பது முற்றிலும் வேறு விஷயம். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலிருந்து மாநில அரசை ரிமோட் கண்ட்ரோல் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மன்விந்தர் சிங் கியாஸ்புரா

இதற்கு பஞ்சாபின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மன்விந்தர் சிங் கியாஸ்புரா பதிலடி கொடுத்தார். மன்விந்தர் சிங் கியாஸ்புரா கூறுகையில், அமைச்சர் பேசியது சரிதான் நாங்கள் இதுவரை சட்டப்பேரவையை பார்க்கவில்லை. நாங்கள் சாமானியர்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் டாக்டர்கள், 14க்கும் மேற்பட்டவர்கள் வக்கீல்கள் மற்றும் 16 பேர் என்ஜினீயர்கள். இந்த அமைச்சர்களை போல் ஊழல் செய்வதை விடுத்து, நாட்டை எப்படி ஆள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.