நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம், குஜராத்தில் மார்ச் முதல் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம்.. பகவந்த் மான்
நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம், குஜராத்தில் மார்ச் முதல் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பகவந்த் மான் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்தது, அப்போது எதிர்ப்பாளர்கள் (எதிர்க்கட்சிகள்) அதை எப்படி செய்வீர்கள் என்றார்கள். நாங்கள் அதை செய்தோம். பஞ்சாபிலும் இதே நிலைதான். குஜராத்திலும் மார்ச் முதல் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம்.
பஞ்சாப் மக்களுக்கு விரைவில் பூஜ்ஜிய மின்கட்டணம் கிடைக்கும். எனக்கு மொத்தம் 25 ஆயிரம் பில்கள் கிடைத்துள்ளன. நீங்கள் அதை சரிபார்க்கலாம். பஞ்சாபில் 75 லட்சம் மீட்டரில் (இணைப்புகள்) 61 லட்சம் இணைப்புகள் (பயனாளர்கள்) பூஜ்ஜிய பில்களை பெறுவார்கள். நான் முதலில் குஜராத் வந்தபோது, குஜராத் மாடலில் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நெடுஞ்சாலைகள் பரவாயில்லை, ஆனால் நாங்கள் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறியவுடன உண்மையான குஜராத் மாடலை பார்க்க முடிந்தது.
உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று நாங்கள் கூறவில்லை. மக்களுக்கு அவர்களின் ரூ.30 ஆயிரத்தை மிச்சப்படுத்தும் பலன்களை வழங்குவோம் என்று கூறுகிறோம். குஜராத்தில் நாங்கள் ஆட்சி அமைப்போம். நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம் என்கிறார்கள், சிலர் நாங்கள் காங்கிரஸின் பி டீம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.