மத்திய பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு உருவாகும் கோயில்..துறவி சுவாமி சத்யநாத் தகவல்

 
யோகி ஆதித்யநாத்

மத்திய பிரதேசத்தில் உ.பி. யோகி ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டப்படும் என்று துறவி சுவாமி சத்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத்,  குண்டர்கள் மற்றும் மாபியாக்களுக்கு எதிரான தனது கடுமையான அணுகுமுறை மற்றும் நடவடிக்கை காரணமாக தனது மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் புகழைப் பெற்றுள்ளார். சட்டவிரோத ஆக்கிரமி்ப்பு சொத்துக்களை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டாகும் நடவடிக்கை காரணமாக அவருக்கு புல்டோசர் பாபா என்று செல்லமாக மக்கள் அழைத்தனர். மேலும் மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத் பிரதமராவார் என்றும் பேசப்படுகிறது.

துறவி சுவாமி சத்யநாத், யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஒருவர் கோயில் கட்ட உள்ளார். யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட இளம் துறவி சுவாமி சத்யநாத் என்பவர் மத்திய பிரதேசத்தில் நிவாரி மாவட்டத்தில் உ.பி. முதல்வருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் சீடர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சுவாமி சத்யநாத், யோகி ஆதித்யநாத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி உலகை துறந்து துறவறம் தழுவியதாக தெரிவித்தார்.

செல்ல நாயுடன் யோகி ஆதித்யநாத்

துறவி சுவாமி சத்யநாத் தகவல்படி, உத்தர பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய நிவாரி மாவட்டத்தின் தெஹர்கா கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. யோகி ஆதித்யநாத்துக்கு அர்பணிக்கப்பட்ட கோயில் 20 அடி அகலமும் 12 உயரமும் இருக்கும். யோகி ஆதித்யநாத்தின் அற்புதமான சிலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து சிறப்பு கைவினைஞர்களால் கட்டப்படும். இந்த கோயிலில் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் வாழ்நாளில் செய்த பணிகள் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கோயில் ஒரு வருடத்தில் முழுமையாக கட்டப்பட்டு 2024ம் ஆண்டு தீபாவளியன்று திறக்கப்படும். கோயில் திறப்பு விழாவுக்கு உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அழைக்கப்படுவார்.  யோகி ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டுவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே அயோத்தியை சேர்ந்த ஒருவர் யோகி ஆதித்யநாத்தின் பக்தர் என்று தன்னை கூறிக்கொண்டு யோகி ஆதித்யநாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலை கட்டினார்.