ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உடைத்து மோடிக்கு உதவ முயற்சிக்கிறார்.. சந்திரசேகர் ராவை தாக்கிய காங்கிரஸ்

 
கே.சந்திரசேகர் ராவ்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உடைத்து மோடிக்கு உதவ முயற்சிக்கிறார் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: நரேந்திர மோடிக்கு எதிரான கூட்டணி அமைக்கும் திட்டம் முதல்வர் கே.சந்திரசேகர் ராவிடம் இல்லை. இதெல்லாம் (பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி உருவாக்குவது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை சந்திரசேகர் ராவ் சந்தித்தது) போலியானது. அவர் பிரதமர் மோடிக்கு உதவ முயற்சிக்கிறார். ஸ்டாலின், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கும் வகிக்கும் நிலையில், இந்த கூட்டணியை உடைத்து மோடிக்கு உதவ கே.சந்திரசேகர் ராவ் முயற்சித்து வருகிறார். இது ஒரு சதி. 

ரேவந்த் ரெட்டி

உண்மையிலேயே கே.சந்திரசேகர் ராவ் கூட்டணி அமைக்க விரும்பினால் ஆந்திராவில் ஜெகன், நவீன் பட்நாயக் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் சென்று பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர் உத்தர பிரதேசத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை பிரச்சாரம் செய்து போட்டியிட செய்தார். இதனால் சமாஜ்வாடி கட்சி தேர்தலில் தோல்வியடைகிறது, யோகி மற்றும் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது.  மோடியிடம் இருந்து சுபாரி எடுத்து காங்கிரஸை பலவீனப்படுத்த சந்திரசேகர் ராவ் முயற்சி செய்கிறார். 2018 தேர்தலுக்கு முன், நரேந்திர மோடிக்கும், காங்கிரசுக்கும் எதிராக ஒரு முன்னணியை துவக்குகிறோம் என கூட்டாட்சி முன்னணி குறித்து சந்திரசேகர் ராவ் பேசினார். எங்கே எந்த முன்னணி? மறுபடியும் கூட்டாட்சி முன்னணி பிரச்சினையை எழுப்ப ஆரம்பித்தார். 

மோடி

2000 முதல் 2021 வரையிலான காலத்தில் சந்திரசேகர் ராவின் அரசியல்வாழ்க்கையை பார்த்தால், 2004ல் காங்கிரஸூடனும், 2009ல் சந்திரபாபு நாயுடுவுடனும் இருந்து பின்னர்  ஏமாற்றியவர். 2014ல் காங்கிரஸை ஏமாற்றினார். 2018ல் வரும் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று நரேந்திர மோடியின் உதவியை பெற்று, அவர்களையும் ஏமாற்றினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.