ஓபிஎஸ்சின் 9 பக்க பரபரப்பு கடிதம்! 14.6.2022 முதல் தற்போது வரை அதிமுகவின் சட்ட விதி மீறல்

பொதுக்குழு கலவரத்திற்கு பின்னர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவை பலப்படுத்த வேண்டும் என்று தேனிக்கு சென்று இருந்தார். இங்கே எடப்பாடி டீம் அதிரடியான வேலைகளை பார்த்து வந்தது. அதிமுகவின் சார்பாக வெளிவந்த நமது அம்மா நாளிதழில் ஓபிஎஸ்சின் நிறுவனர் பொறுப்பை பறித்தது. அடுத்ததாக கட்சி பதிவியை பறித்து கட்சியை விட்டு நீக்கவும் சட்ட ஆலோசனைகள் நடத்தி வந்தது.
வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள பொதுக்குழுவில் எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஓபிஎஸ் பொருளாளர் பதவி பறிக்கப்படும். கட்சியை விட்டு நீக்கப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் மிரட்டினர். ஒருங்கிணைப்பாளர் பதவி கடந்த பொதுக்குழுவில் காலாவதி ஆகிவிட்டது என்றும் சொல்லியிருந்தனர்.
நிலைமை உச்சகட்டத்திற்கு சென்றதால் தேனியில் இருந்த ஓபிஎஸ் அவசரமாக சென்னைக்கு வந்தார். சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்தல் ஆணையத்தினற்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், கடந்த 14.6 .2022 முதல் தற்போது வரை அதிமுகவின் சட்ட விதி மீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த கடிதத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டில் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது . இந்த இரண்டு பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்த சட்ட திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் அது குறித்து, அன்று முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியில் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு உட்பட்டு பணிபுரிந்து வருகிறோம். இந்த அமைப்பில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம் . இந்த நிலையில் அண்மையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி அன்று சென்னையில் நடந்தது . கடந்த ஜூன் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பின்னர் கட்சியில் ஒற்றை தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டன. இதனால் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளருக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் கொண்டுவரப்பட இருந்தது. ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அந்த 23ஆம் தீர்மானங்களையும் நிராகரிப்பதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து கட்சியின் சீனியர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக தெரிவித்தனர்.
நடந்த பொதுக்குழுவில் சட்டத்துக்கு புறம்பான பல விஷயங்கள் நடந்தன. அதிமுக பொருளாளர் என்கிற அடிப்படையில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை இந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யவும் என்னை அனுமதிக்கவில்லை . தீர்மானங்களை புக்காக அச்சடித்து பொதுக்குழுவில் உள்ள அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை . அவைத்தலைவர் மூலம் புதிய பொதுக்குழு தேதி அறிவித்துள்ளார்கள். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இருந்த போது இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே ஒருங்கிணைப்பாளர க்கு தெரிவிக்கவில்லை . இப்படி எல்லாவற்றையும் சட்டத்திற்கு விரோதமாக செய்ததால்தான் வெளிநடப்பு செய்தோம். பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதி அளிக்கக்கூடாது உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் வெளியாட்கள் பலரும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். கோர்ட் உத்தரவுக்கு புறம்பாகவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சி அளிக்கும் வகையில் என் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசினார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து ஓபிஎஸ், இருபத்தி ஏழாம் தேதி காலையில் 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என்று முதல் நாளில் ஜூன் 27ஆம் தேதி இரவு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் முறையான கையெழுத்து இல்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து எதுவும் இல்லை . அதிமுகவின் சட்ட விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அந்தக் கூட்டமும் சட்டத்திற்குப் புறம்பானது . அந்தக் கூட்டத்தில் 11 வரும் பொதுக்குழு நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.