முதல்வரை குறிவைக்கும் 6 ஆயுதங்கள்! ஒரே தலைவனை சாய்க்க பின்னப்படும் சதிவலை!

 
ம்க்


 முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை அரசியலில் சாய்த்து விட சதிவலை பின்னப்படுகிறது என்கிறார் பிரபல திரைப்பட இயக்குநர் விசி குகநாதன். இது குறித்து அவர் என் இனிய தமிழ் சொந்தங்களே என்கிற தலைப்பில் எழுதியிருக்கும் கடிதம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் வெளிவந்திருக்கிறது.

ச்ட்

பிடிஆரின் ஆடியோ, திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியீடு, அமைச்சரவை மாற்றம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார் குகநாதன்.   இந்த கடிதத்தில்,   ’’கடினமான காலங்களை சந்திக்கின்ற போது நம்மை மீறிய எதிர்ப்புகள் வலுக்கும் போது எதிரிகள் நம்மை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க வியூகங்கள் வகுக்கும்போது நாம் சர்வ ஜாக்கிரதையாக அதனை தாண்டி வருவதற்கு முதலிலே அவசியம் ஒற்றுமை ’’என்கிறார்.

 தொடர்ந்து அந்த கடிதத்தில் குகநாதன்,   ’’கருத்து வேறுபாடு ஒற்றுமையை குலைக்கின்ற செயல்களோ ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் . சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் என்கிற நம் மூத்தோருடைய மொழியை நாம் மறந்து விடக்கூடாது’’ என்கிறார்.

க்

’’அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தேர்தல் இதற்கு ஒரு உதாரணம் .  அந்த தேர்தலை ஒரு பார்வையாளராக ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தவன் நான்.  தேனாண்டாள் முரளி ராமசாமிக்காக தற்போதைய அரசு எதை வேண்டுமானாலும் செய்து அவரை வெற்றி அடையச் செய்வார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரம் பரவியது .   நான் பார்த்த வரையில் அப்படி ஒரு உதவி வரவே இல்லை.  தேர்தல் கணிப்பாளராக இருந்த ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளின் பணி மிகவும் நேர்த்தியாக நடந்தது’’என்று சொல்லும் குகநாதன்,

’’நெல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் புல்களை எடுக்கப்பட்டே ஆக வேண்டும்.  புல் மேல பாவம் பரிதாபம் காட்டினால் நெல் பாதிக்கப்படும் . மேல்மட்டத்தில் மட்டும் திறமையாளர்கள் இருந்தால் போதாது . அடிமட்ட தொண்டனும் மனநிறைவு பெற வேண்டும். 

ப்

 பேரறிஞர் அண்ணா ஆரம்பத்தில் வைத்த கொள்கை முழக்கம் ..அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்பதே ஆகும் . வீரமும் விவேகமும் இணைந்து அன்று அண்ணா பின்னால் அணி வகுத்தது.  அதை பார்த்து டெல்லி கலங்கியது.  அதனால் நேரு பிரிவினை தடைச் சட்டம் இயற்றினார்.  அண்ணாவை ஜெயிலிலேயே தள்ளிவிட முயற்சிகள் நடந்தன.   எல்லாம் தெரிந்த அண்ணா சிந்திக்க ஆரம்பித்தார்.  கலந்து ஆலோசித்தார் .  தன் பின்னாலே சேர்ந்து பெருங்கூட்டத்தை சட்டத்துக்கு பலி கொடுத்து ஜெயிலுக்கு அனுப்புவதா அல்லது அவர்களை ஆட்சியில் அமர வைத்து மாநிலத்திற்கு வளம் சேர்ப்பதா? பிரிவினை என்கிற ஜீவாதாரக் கொள்கையை கைவிட்டு தேர்தலை சந்தித்து கோட்டையைப் பிடித்து தமிழ்நாட்டை உருவாக்கினார்.

ர்ன்

 இன்றைக்கு அவரது அன்புத்தம்பி நம் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடலை கையில் எடுத்திருக்கிறார்.  இதனை நமது மாநிலம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணி திரள ஆரம்பித்து விட்டனர் . இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கு இது வித்திடுகிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு எல்லா வழிகளிலும் நமது முதல்வரின் செயல்களை முடக்கிவிட முழு பல பிரயோகம் முறுக்கி விடப்பட்டிருக்கிறது.  ஊழல் குற்றச்சாட்டு அவர்களின் முதல் ஆயுதம்,  ஊடகப் பிரச்சாரங்கள் அவர்களது இரண்டாவது ஆயுதம்,  பல குற்றச்சாட்டுகளுக்கு பலியாகி போவதற்கு இடம் தெரியாமல் ஒன்றிய ஆட்சியாளர்களின் காலியிலே விழுந்து கிடக்கும் துரோகிகளையும் சிறைத் தண்டனை பெற்றவர்களையும் பயன்படுத்தி சாதி அரசியலை மூன்றாவது ஆயுதமாகவும்,  கீழ்மட்ட அதிகாரிகளை வைத்து அடித்தட்டு மக்களின் ஆசைகளை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்த வைப்பது நாலாவது ஆயுதமாகவும்,  வந்தேறிகளின் மத அரசியலை ஐந்தாவது ஆயுதமாகவும், ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் ஆறாவது ஆயுதமாகவும் பயன்படுத்தி அண்ணாவின் தம்பியை திராவிட மாடல் நாயகனை நமது நம்பிக்கை நட்சத்திரத்தை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை அரசியலில் சாய்த்து விட சதி வலை பின்னப்படுகிறது’’ என்கிறார்.

வ்

’’தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிள்ளைகளே.. பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளே.. கலைஞரின் உடன்பிறப்புகளே.. பாதை மாறிப் போனால் பயணம் ஊர் போய் சேராது.  ஒற்றைச் செங்கல் கூட உறுதியற்றதாக இருந்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து கட்டப்பட்ட திராவிட கோட்டைக்கு இன்று வலுவான ஒரே தலைவன் ஸ்டாலின் மட்டும்தான்.   புகையாக பகை உள்ளே நுழைய முயலும் போது அதனை தடுக்க நமக்குள் எத்தனை நெருக்கம் வேண்டும்.  ஒற்றுமை ஒன்றே பகை வெல்ல ஒரே வழி.   ஒற்றைக் குரலில் ஒலிப்போம் அண்ணாவின் தம்பி ஸ்டாலினின் திராவிட அரசியலில் இனி இந்தியாவை ஆளவும் இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கவும் இருக்கும் ஒரே அரசியலாகும்’’ என்கிறார் அழுத்தமாக.