கள்ள ஓட்டு சர்ச்சை.. நபரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்த ஜெயக்குமார்.. பாய்ந்தது வழக்கு!

 
ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவுபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் எப்போதுமே அடிதடி சண்டைகள், மோதல்கள், கள்ள ஓட்டு விவகாரம் என பல களேபரங்கள் நடக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இருப்பினும் ஆங்காங்கே கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டதாகக் கூறப்பட்டது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இறுதியில் அவர் எந்தவித பிரச்சினையுமின்றி வாக்களித்தார். இச்சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருவல்லிக்கேணியில் திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக வீடியோ ஆதாரத்தைக் காட்டினார். அதேபோல வாக்குப்பதிவு அன்று ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றாக புகார் எழுந்தது.


உடனே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கு வந்தனர். அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒரு நபரைப் பிடித்து அவர் மீது அத்துமீறினர். குறிப்பாக ஜெயக்குமார் அந்நபரை சட்டையைக் கழற்றுமாறு மிரட்டினார். அவரைப் பிடித்து இழுத்தார். மிரட்டலுக்குப் பயந்து அவர் சட்டையைக் கழற்றினார். அச்சட்டையைக் கொண்டு அவரின் கைகளைக் கட்டி அரை நிர்வாணமாக ஜெயக்குமார் சாலைகளில் இழுத்து வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.


அவர் கள்ள ஓட்டு தான் போட்டார் என்றால் அவரை தேர்தல் பறக்கும் படையினரிடம் முறையாக ஒப்படைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு மானப்பங்கப்படுத்துவது கண்டனத்துக்குரியது என ஜெயக்குமார் மீது குற்றச்சாடு எழுந்தது. இச்சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல திமுகவினர் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநரும் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.