சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

 

சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது. புதிதாக உருவான ஆவடி தொகுதியில் முதல் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்த சென்டிமென்ட் படி பார்த்தாலும் அத்தொகுதியில் மூன்றாவது எம்.எல்.ஏவாக வந்திருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஆவடி தொகுதி திமுகவினரிடையே எழுந்திருந்தது. அதன்படியே சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி.

பூந்தமல்லி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த ஆவடி, தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் 2011ல் புதிய தொகுதியாக ஆனது ஆவடி. 2011, 2016 இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.தமோதரன் 66,864 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 1,06,669 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் மீண்டும் க.பாண்டியராஜனும், திமுக சார்பில் மீண்டும் சா.மு.நாசரும் களமிறங்கினர். தேமுக சார்பில் என்.எம்.சங்கரும், மநீம சார்பில் வி.உதயகுமாரும், நாதக சார்பில் ஜி.விஜயலட்சுமியும் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே சா.மு.நாசர் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் சா.மு. நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

2011 தேர்தலில் வெற்றி பெற்ற அப்துல்ரஹீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2016 தேர்தல் வென்ற க.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதனால், ஆவடி தொகுதியின் மூன்றாவது எம்.எல்.ஏ.வாக தேர்வாகியிருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். அதன்படியே அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.