200 திமுக நிர்வாகிகள் ராஜினாமா முடிவு! கருணாநிதி தாயார் சமாதி முன்பு சமர்ப்பிக்க திட்டம்

 
d

டிஆர்பி ராஜாவால் அதிருப்தி அடைந்த 200 திமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்ய விருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் சமாதி முன்பாக இந்த ராஜினாமா கடிதத்தினை சமர்ப்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

 திமுக உட்கட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்ட ஒன்றியங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த அறிவிப்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆனந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்திருக்கிறது.  மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவின் ஆதரவாளர் தான் ஆனந்த்.   ஆனால் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் வாக்களிக்க தகுதியுள்ள 280 திமுக பொறுப்பாளர்களில் அண்ணாதுரை என்பவருக்கு 216 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

t

 அப்படி இருக்கும்போது டிஆர்பி ராஜா பரிந்துரையின் பேரில் ஆனந்த் என்பவரை நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக தலைமை அறிவித்திருக்கிறது.  இதனால் திமுகவின் தலைமைக்கு எதிராக கூட்டம் கூடப்பட்டு அதில் திமுக தலைமை ஆனந்த் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.   அப்படி திரும்பப் பெறவில்லை என்றால் அண்ணாதுரை ஆதரவாளர்களான நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மூன்று பேர் , ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆறு பேர் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஒன்றிய பிரதிநிதி கலைக்கழகச் செயலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை நாளை மறுதினம் ராஜினாமா செய்யவிருக்கிறார்கள்.  

 மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் சமாதி அமைந்திருக்கும் திருவாரூர் காட்டூருக்கு சென்று அங்கே சமாதி முன்பாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க போவதாக அறிவித்துள்ளனர்.