தலித் மாணவர் மரணம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து 12 கவுன்சிலர்கள் ராஜினாமா.. நெருக்கடியில் அசோக் கெலாட்

 
கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

ராஜஸ்தானில் தலித் மாணவர் மரணத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்து இருப்பது அசோக் கெலாட் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில்  ஜலோர் மாவட்ட பள்ளி ஒன்றில் 8 வயது தலித் மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரின் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார். இதனையடுத்து அந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அந்த மாணவன் சிகிச்சை பலன் இன்றி அண்மையில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனா சந்த் மேக்வால்

இந்த சம்பவத்தின் எதிரொலியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனா சந்த் மேக்வால் பதவியிலிருந்து விலகுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். பனா சந்த் மேக்வால் தனது ராஜினாமா கடிதத்தில், எங்கள் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தவறினால், பதவியில் நீடிக்க எங்களுக்கு உரிமை இல்லை. எனது மனதின் குரலை கேட்டு நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் பனா சந்த் மேக்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடித்தற்காகவோ அல்லது மீசையை வளர்த்தற்காகவோ அல்லது திருமணத்தின் போது குதிரையில் சவாரி செய்ததற்காகவோ தலித்துக்கள் கொல்லப்படுகிறார்கள். 

காங்கிரஸ்

நீதித்துறை செயல்முறை ஸ்தம்பித்துள்ளது மற்றும் வழக்கு கோப்புகள் ஒரு மேசையிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தலித்துக்களின் உரிமைகளை பாதுகாக்க யாரும் இல்லை என்று தெரிகிறது என தெரிவித்தார். இந்நிலையில், தலித் மாணவர் கொலை விவகாரத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பனா சந்த் மேக்வாலுக்கு ஆதரவாக  பாரான் நகராட்சியில் உள்ள 25 காங்கிரஸ் கவுன்சிலர்களில் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எம்.எல்.ஏ.வை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.