மோடி அறையில் 10 நிமிடம் -தம்பிதுரை சந்திப்பில் நடந்தது என்ன?

 
t

பிரதமர் மோடி அறையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்பி தம்பிதுரை 10 நிமிடங்கள் சந்தித்து பேசி இருக்கிறார்.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் அவர்  பிரதமரை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் பழனிச்சாமி அணிக்கு கிடைக்குமா? பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? இல்லை யாருக்குமே கிடைக்காமல் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என்ற பரபரப்பு நிலை இருக்கிறது. 

eo

 உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்ததற்கு தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க இருக்கிறது .  இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று சொல்லி பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 

 இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற பரபரப்பு ஒரு புரம் இருக்க,  அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்.  இல்லை என்றால் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தங்களது எண்ணத்தை தெரிவித்து இருந்த நிலையில்,  அதை கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது  தனது வேட்பாளரை அறிவித்து விட்டார்.  இதனால் வேறு வழி இன்றி பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துவிட்டார். 

 இதில் பாஜக போட்டியிடுகிறதா அப்படி போட்டியிடவில்லை என்றால் பன்னீர்செல்வம்- பழனிச்சாமி இரண்டு அணிகளில் யாருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க போகிறது என்பது நாளை தெரிந்து விடும் என்கிறார்கள்.  இந்த நிலையில்  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் பழனிச்சாமி அணியின் ஆதரவு எம்பி தம்பிதுரை இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார்.  சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது .  பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தம்பிதுரை தரப்பில் சொல்லப்படுகிறது.  ஆனால் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்தது என்ற பேச்சு  பரவுகிறது.