கட்சியை கைப்பற்றும் வரை ஓயமாட்டேன் - சசிகலா சூளுரை

 
sasikala sasikala

நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் சசிகலா தெரிவித்துள்ளார்.

Sasikala hits out at AIADMK in latest audio clip. Here's what she said -  India News

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா திருமணத்தை நடடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய அவர், ”கழகத் தொண்டர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களால் உருவான ஒரு இயக்கம். எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் எத்தனையோ, சோதனையான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. நம் புரட்சித் தலைவர் மறைவிற்கு  பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம் தற்போது புரட்சித்தலைவி அம்மா மறைவிற்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அப்போது எவ்வாறு மீண்டு எழுந்து வந்ததோ அதே போன்று தற்பொழுதும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும் என்பது ஐயமில்லை.

தொண்டர்கள் இல்லாமல் கட்சியை ஆண்டு விடலாம் என நிர்வாகிகள் நினைக்கலாம். ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு உள்ளவரை நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடு செழிப்போடு தலைநிமிரும் என எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாம் செல்லும் இடங்களில் எல்லாம், தொண்டர்களும், தமிழக மக்களும் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா, அது எப்போது நிகழும் என்று எதிர்பார்க்கும் இந்த சூழலில் அதனை நிறைவேற்றிக் காட்டுவோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

நம் கழகத்தை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றிடும்  உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேளையில் அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பது நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். பொறுமையை கடைபிடித்து கண்டிப்பாக புகழ் வந்து சேரும்” என்றார்.