ஓபிஎஸ்க்கு வந்த டெல்லி அழைப்பு! அதிமுகவில் அதிரடி

ஓபிஎஸ்க்கு இன்று காலையில் டெல்லியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ஓ. பி. ரவீந்திரநாத் எம்.பி. மூலமாக அந்த முக்கிய புள்ளி தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி -உள்துறை அமைச்சர் இருவரும் சந்திக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் அதிமுகவின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
அதிமுகவில் தினகரன் தனியாக கட்சி தொடங்கி விட்டதால் அதிமுகவின் வாக்குகள் பிரிந்து விட்டன. இது திமுகவிற்கு ஏற்கனவே சாதகமாக இருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் பிரச்சனையால் மேலும் அதிமுக இரண்டு அணியாக பிரிந்து விட்டால் வாக்குகள் சிதறிவிடும் . அதிமுகவின் கூட்டணி பலத்தை நம்பி இருக்கும் தங்களுக்கு அது பாதகமாகிவிடும் என்று கருதுகிறது பாஜக மேலிடம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த சூழ்நிலை இருந்தால் தமிழகத்தில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பாஜக மேலிடம், ஓபிஎஸ்- இபிஎஸ் -தினகரன் 3 பேரும் ஒன்று பட வேண்டும் என்று விரும்புகிறதாம்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இனி இரட்டை தலைமை சரிவராது. ஓபிஎஸ்க்கு இரண்டு சதவீத ஆதரவு மட்டுமே கட்சியில் இருக்கிறது. அவர் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறார். அவரால் இனி கட்சிக்கு எந்த முன்னேற்றமும் இருக்காது. அதனால் மீண்டும் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல என்று பாஜக தலைவர்களிடம் திட்டவட்டமாக சொல்கிறாராம்.
இதனால் பாஜக மேலிம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில், தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டோம் என்று கெத்தாக டெல்லி சென்றார் எடப்பாடி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றபின்னர், புதிய குடியரசுத்தலைவர் பதவி ஏற்பிலும் பங்கேற்பதற்காகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டும் டெல்லியில் சில தினங்கள் தங்கி இருக்க முடிவு செய்து இருந்தார் எடப்பாடி.
ஆனால், பிரதமர் மோடி, அமித்ஷா இருவருமே எடப்பாடியை சந்திக்க அனுமதி மறுத்ததால், டெல்லியில் அவமானப்படுத்தப்பட்ட ஈபிஎஸ் கடும் கோபத்தில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையும் புறக்கணித்து விட்டு அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். எடப்பாடியை சந்திக்க மறுத்திருக்கும் அதே வேளையில், இன்று காலையில் ஓபிஎஸ்க்கு வந்த டெல்லி தொலைபேசி அழைப்பு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓபி. ரவீந்திரநாத் எம்.பி. மூலமாக ரகசிய தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார் அந்த முக்கிய புள்ளி. இதனால் அதிமுகவில் அரசியல் களம் மாறுகிறதா? என்று பரபரப்பு எழுந்திருக்கிறது தமிழக அரசியலில்.