இதுதான் என் ஆசை! வீடியோவில் கமல் உருக்கம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் . கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியில் தொடங்கிய இந்த இந்திய ஒற்றுமை பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு நூறாவது நாளை கடந்திருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் நாளை நடைபெறும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் டெல்லிக்கு சென்று இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
அண்மையில் சென்னை அண்ணா நகரில் மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இக்கோட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய போது , ஓரிரு வாரங்களில் மாநில முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். அவர் மேலும், ராகுல் காந்தி தனக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் பாதயாத்திரையில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனால் கலந்து கொள்ள போகிறேன் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்றும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ’’உயிரே ,உறவே, தமிழே, வணக்கம்! ராகுல் காந்தி அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று என்னை அழைத்திருந்தார். ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் என்னை ஒரு இந்தியனாக குறிப்பிட்டு இருந்தார். ஒரு இந்தியனாக இந்தியா இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இதை நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த முன்னெடுப்பில் தலைநகரில் வாழும் தமிழர்களும் இதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது தேசத்திற்கான ஒரு நடை பயணம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24 , 2022 ல் நான் தலைநகருக்கு வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன் . வாருங்கள் புதிய இந்தியா படைப்போம். நாளை நமதே! ஜெய்ஹிந்த்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுத்து, புதிய இந்தியா படைப்போம். வாருங்கள்! தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்கள் அழைப்பு!#KamalHaasan#BharatJodoYatra#டெல்லியில்நம்மவர் pic.twitter.com/o5QP77xvNG
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 23, 2022