அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?

 

அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?

பரபரப்புக்கும், பண விளையாட்டுக்கும் பஞ்சம் இல்லாத தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த முறை வரலாறு காணாத குழப்பங்களையும் சந்திக்க காத்திருக்கிறது.
தற்போதைய ஆட்சிக் காலம் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்தமுறை நடக்கும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் ரகசிய திட்டங்கள் மற்றும் வியூகங்கள் என்ன? யாருக்கு வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது? என்பதெல்லாம் திரை மறைவில் வெகு வேகமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் ‘இணையதளம்’, ‘வாட்ஸ் அப்’ மூலம் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யும் உக்திகளுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. வழக்கமான கூட்டணி நடை முறைகளையும் தாண்டி, இந்த முறை புதிதாக “வாய்ஸ்” கூட்டணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளனர்
தமிழகத்து பிரபல வி.ஐ.பி.க்கள். முக்கிய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரை தத்தமது கட்சிகளுக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுக்கும்படி திரை மறைவு வேலைகள் நடந்து வருகின்றன.

அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?

மக்கள் நலக்கூட்டணி…

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227 இடங்களிலும், கூட்டணியாக மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடமும், இந்திய குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை,தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டன.
திமுக 176 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 41 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 , மனித நேய மக்கள் கட்சி 4, புதிய தமிழகம் கட்சி 3 இடங்கள் தவிர பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டன.
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக 104, மதிமுக 28, இ.கம்யூனிஸ்ட் 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25, தமிழ்மாநில காங்கிரஸ் 26 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 26 இடங்களில் போட்டியிட்டன. இதுதவிர பாஜக கூட்டணி, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.
தேர்தல் முடிவில் அ.தி.மு.க தனித்து 134 இடங்களை வென்றது. திமுக 89 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. தமிழகத்தில் மொத்தம் பதிவான 4.29 கோடி வாக்குகளில் அதிமுக 41.06 சதவீத வாக்குகளையும், திமுக தனித்து 31.86 சதவீத வாக்குகளையும் பெற்றது.
காங்கிரஸ் 6.47 சதவீத வாக்குகளையும். பாமக 5.36 சதவீதவாக்குகளையும் பெற்றது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறப் போகிறது. இவர்களால் கடந்த 30 ஆண்டு காலமும் தமிழக அரசியல் பரபரப்பாகவே இருந்தது. இந்த நிலையில் வரக்கூடிய தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் மிகப் பெரிய புயலை ஏற்படுத்த காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த தேர்தலில் மொத்தம் 257 கட்சிகள் களம் இறங்கப் போகின்றன. மேற்படி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சாதி, மத அமைப்புகள் பட்டியல் தனி.

அதிமுக உள்கட்சி குழப்பம்
அதிமுகவை பொறுத்த வரை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் என இரு பிரிவெல்லாம் கிடையாது. அவையெல்லாம் கிளப்பி விடப்பட்டவை. தற்போதைக்கு எடப்பாடியாரை முன்னிலைப் படுத்திதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள்.இது தவிர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கள் அவரது சாதனைகள்,எடப்பாடியாரின் ஆட்சியில் உருவான திட்டங்கள் ஆகியவை முன்னிலைப்படுத்த இருக்கின்றன.பா.ஜ.க. உள்ளிட்ட பழைய கூட்டணிகளுக்கே வாய்ப்புகள் இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?

பா.ஜ.கவின் புது வரவான அக் கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது. இது தவிர வழக்கம் போல பண வியூகமும் கட்டாயம் இடம் பெரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சசிகலா விடுதலையாகும் பட்சத்தில் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் கூடிப் பேசி, கட்சியை அவர் வசம் ஒப்படைக்கும் முடிவே எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.காரணம் அதிமுகவில் ஏராளமான பேர் சசிகலா பக்கம் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், கட்சி இரண்டாக உடையும்.
இதனால் தேர்தல் முடிவு திமுகவிற்குத்தான் சாதகமாக அமையும் என்பது அப்பட்டமான கணக்கு. சசிகாலவின் திட்டப்படி அ.ம.மு.கவை அதிமுகவுடன் ஒருங்கிணைப்பார். இதற்கு தினகரனும் மறுப்பு சொல்ல மாட்டார். அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்படலாம்.இந்த ஒருங்கிணைப்பு மூலம் அ.ம.மு.க. ஆதர்வாளர்களில் எத்தனை பேருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்பதில் சிக்கல் இருக்கிறது. சசிகலாவை பொறுத்தமட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டிடும் முடிவை எடுப்பார் என்கிறார்கள்.

திமுக கணக்கு என்ன?


தி.மு.கவை பொறுத்த மட்டில் முதல்வர் வேட்பாளரில் குழப்பம் இல்லை. மு.க.ஸ்டாலின் மட்டுமே… இம் முறை திமுக தனித்து போட்டிடலாம் என்று அவருக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர், அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அதிமுகவின் பண பலம் பெரிய அளவில் இருக்கும் என்றும் ஆகவே கூட்டணி சேர்ப்பதன் மூலம்தான் வெற்றி பெற முடியும் எனவும் அவர் கணக்கு போடுவதாகச் சொல்கிறார்கள். எந்த தேர்தல் என்றாலும் கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவினால் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடிந்திருக்கிறது. கூட்டணி அமையாவிட்டால் திமுகவினால் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியாமலேயே போய்விடுகிறது என்பது கடந்த கால நிகழ்வு.எனவே காங், ம.தி.மு.க விடுதலைச் சிறுத்தைகள். எனப் பல கட்சிகளுடன் கூட்டணி நடக்கும் என்றே தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?


கமல்-ரஜினி பிரவேசம்…
ரஜினிகாந்தை பொறுத்தவரை, அவர் இம்முறை தேர்தலில் குதிக்க மாட்டார் என்றே தெரிகிறது. அவசியப்பட்டால் பா.ஜ.கவிற்கு ‘வாய்ஸ்’ கொடுப்பார் என்கிறார்கள். இது பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு மிகப் பெரிய சாதகமாக அமையும். தேர்தல் வெற்றி சுலபமாகிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கமலஹாசனைப் பொறுத்தவரை தனித்து போட்டியிடுவது பற்றிதான் ஆலோசனைகள் செய்து வருகிறார்.அவரை திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பலர் வலியுறுத்தி வருகின்றனர். என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பது தெரிய வில்லை. இவர்களைத் தவிர நடிகர் விஜய், விஷால், சிம்பு போன்ற பலரும் அரசியல் களம் குதிக்கிறார்கள். தனிக்கட்சி தொடங்க நடிகர் விஜய்யை பலர் வற்புறுத்தினாலும் அவர் அந்த முடிவில் இல்லை. யாருக்காவது ‘வாய்ஸ்’ கொடுக்கலாமா? என்பது பற்றிதான் ஆலோசித்து வருகிறார். நாம் தமிழர் சீமான் முன் எப்போதும் இல்லாத வகையில் படு வேகத்தில் களம் இறங்கப் போகிறார்.

அரசியல் கட்சிகளின் அதிரடி திட்டங்கள் –வெற்றி யாருக்கு காத்திருக்கிறது ?

தே.மு.தி.மு.கவும்,பாட்டாளி மக்கள் கட்சியும் தனித்து போட்டியிடவே விரும்புகிறது.தேர்தலுக்கு பிறகு அவர்கள் கூட்டணி வைக்கும்படியான ஒரு மறைமுக கணக்கு போட்டு வருகிரார்கள்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் இந்த முறை அதிக எண்ணிக்கையில் சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அதிமுகவிடம் இருந்து 60 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
சமீப காலமாக பல்வேறு புதிய கட்சிகள் உதயமாகி இப்போது பல புதிய சின்னங்களுக்கும் மக்கள் ஓட்டு போட ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் சீமானின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகச் சொல்லப்படுகிறது.
இவையல்லாமல் இம்முறை நடக்கும் தேர்தலில் வாரிசு அரசியல் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள்.திமுகவில் மு.க ஸ்டாலினை அடுத்து உதயநிதி, தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் எனப் பலர் அரசியல் களத்தில் குதித்த நிலையில்..வாரிசு அரசியல் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இந்த முறை நடைபெறும் தேர்தலில் ரஜினி, கமல், விஜய் போன்றோர் குறுக்கிடுவதால் சிதறும் ஓட்டுக்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது? வெற்றிக் கனி யாருக்கு என்பது குழப்பமாகவே உள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

-இர.சுபாஸ் சந்திர போஸ்