புதிய பாதையில் செல்லுமாறு வற்புறுத்தும் டெல்லி போலீஸ்… தடைகளை தகர்த்த விவசாயிகள் பேரணி!

 

புதிய பாதையில் செல்லுமாறு வற்புறுத்தும் டெல்லி போலீஸ்… தடைகளை தகர்த்த விவசாயிகள் பேரணி!

அனுமதிக்கப்பட்ட பாதை வழியே சென்ற டிராக்டர் பேரணியை புதிய பாதை வழியாக செல்லுமாறு டெல்லி போலீஸ் வற்புறுத்தியதால், விவசாயிகளுக்கும் போலீஸுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது.

நாட்டின் குடியரசு தினத்தைக் காட்டிலும் பெரிதும் பேசுபொருளானது டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி தான். சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியை டெல்லி போலீஸ் ஆரம்பத்தில் நிறுத்த நினைத்தது. ஆனால், விவசாயிகள் பேரணியிலிருந்து பின்வாங்க போவதில்லை என அறிவிக்கவே, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டெல்லி போலீஸ் பேரணிக்கு அனுமதியளித்தது.

குறிப்பாக, குடியரசு தின விழா நடந்துமுடிந்த பின் 10 மணிக்கு மேல் தான் பேரணி தொடங்க வேண்டும்; அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே பேரணி மேற்கொள்ள வேண்டும்; டிராக்டரில் 5 பேருக்கு மேல் ஏறக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒருபுறம் அனுமதி கொடுத்துவிட்டு, மறுபுறம் பேரணியை தடுத்துநிறுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை சாமார்த்தியமாக செய்தது டெல்லி போலீஸ்.

டிராக்டர்களை பஞ்சராக்க இரும்பு முள் பலகை, சாலைகளில் தடுப்பரண்கள், கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் என பக்காவான பிளானில் டெல்லி போலீஸ் இறங்கியிருந்தது. இருப்பினும், பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கம் உறுதியாக இருந்தது.

இந்நிலையில், அமைதியான முறையில் பேரணி நடைபெற்றது. சிங்கு, டிக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட ஐந்து பாதைகளை டெல்லி போலீஸ் பேரணிக்கு அனுமதித்திருந்தது. அனுமதிக்கப்பட்ட பாதை வழியே வந்த டிராக்டர்களை மறித்த போலீஸ் புதிய பாதை வழியாக விவசாயிகளை செல்ல வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், விவசாயிகள் மறுத்து போலீஸின் தடுப்பரண்களை தகர்த்து முன்னேறி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் விவசாயிகள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. இதனால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது.