தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி

 

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டுவருகிறது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், பொது முடக்க தளர்வுகளுக்கு பின்னர் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதமே பார்கள் திறக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது. தீபாவளிக்கு திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அப்போதும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி

கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.400 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாகவும் டாஸ்மாக் பார் சங்கம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பார்களில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பார்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும், பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும், கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும், பார்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசில் இருந்து 30 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும், அதாவது குளிர் சாதனங்களை பயன்படுத்தினாலும் மிகுந்த குளிர் நிலையில் இருக்கக்கூடாது,உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.