ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

 

ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

ஒரே நாடு – ஒரே தேர்தல் முறை இந்தியாவுக்கு அவசியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட அரசியலமைப்பு நாளில், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற செயலாளர்களின் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த திட்டம் தனது கனவு என கூறியுள்ளார். ஆகவே இந்த ஒரே நாடு- ஒரே தேர்தல் என்கிற திட்டம், இந்த ஆட்சி காலத்தில் இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிகில்லை என்கின்றனர் அரசின் வேகத்தை நன்கு அறிந்தவர்கள். இந்த கருத்துக்கு தேசிய வாத காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றாலும், அதையும் மீறி, ஒரே நாடு- ஒரே தேர்தல் நடக்கும் என்கின்றனர்.

ஒரே நாடு- ஒரே தீர்வு

ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

ஏற்கெனவே ஒரே நாடு- ஒரே ரோடு என வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே இதற்கான முதற்படி போடப்பட்டது. அதை வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்தார். அதன்பின்னர் வந்த காங்கிரஸ் அரசும் அந்த திட்டத்தின் நலன் கருதி அதை செயல்படுத்தியது. அப்படியான திட்டம்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சாலை- தங்க நாற்கர சாலை என கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டில் மோடி பிரதமராக பதவி ஏற்றதும் இந்த ஒரே நாடு திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதன் முதல்படியாக ஒரே நாடு- ஒரே வரி முறை அமல்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தவும் செய்தது. அப்படி கொண்டுவரப்பட்டதுதான் சரக்கு மற்றும் சேவை வரி. ஐந்தாண்டு திட்டக்குழுவை கலைத்து, ஒரே ஆலோசனை குழுவாக நிதி ஆயோக், நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம், ஒரே கல்வித்திட்டம், ஒரே ரேஷன் கார்டு என எல்லாவற்றையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. ஒரே நாடு- ஒரே தேர்வு என மத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு முறையையும் அமல்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சிதான் ஒரே மொழிக் கொள்கையும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

மாநில உரிமைகள் பறிபோகும்!

ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தி வரும் தனித் தனி திட்டங்களையும், மத்திய அரசின் தொகுப்புக்கு மாற்றி வருவதுடன், உயர்கல்வி நிறுவனங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு நேரடியாக கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
பன்முக தன்மை கொண்ட இந்தியாவில், பல வகையான மக்கள், பழக்க வழக்கங்கள், மொழி, கலாசாரம் என அனைத்துமே கிட்டத்தட்ட வெவ்வேறானவை. ஆனால் இந்தியா என்கிற ஒருமைப்பாட்டுடன் இணைந்து ஒரே குரலாக ஒலிக்கின்றன. ஆனால் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் ஒரே நாடு- ஒரே திட்டங்கள் முழக்கம் இந்திய ஒருமைப்பட்டை சிதைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் மாநில உரிமைகள் பறிபோகின்றன என்று எதிர்க்கட்சிகளின் குற்றம் சாட்டி வருகின்ற. சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மாநில கட்சிகளை ஒழிக்கும் முயற்சியா?

ஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்!

ஒரே நாடு- ஒரே தேர்தல் என நடைபெற்றால், மாநில கட்சிகளின் அரசியல் செல்வாக்கு மற்றும் மாநில பிரச்சினைகளை பிரதானப்படுத்தாத தேர்தலாக அமைந்து விடும். மத்தியில் ஆளும் கட்சி குறித்த விறுப்பு வெறுப்புகள் மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகள் செல்வாக்கு செலுத்தமுடியாத மாநிலங்களில், மாநில கட்சிகளை ஒழிக்கும் முயற்சி என இதற்கு அச்சம் தெரிவிக்கப்படுகிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தலை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.ஒரே நாடு- ஒரே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், ஏதோ ஒரு காரணத்தால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டால், அந்த மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகள் வரும் புதிய அரசு பதவி ஏற்காதா? அல்லது மறு தேர்தலுக்காக 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமா என்கிற குழப்பங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் பதில் இல்லாமல், பிரதமர் தனது கனவுத் திட்டம் என்கிறார் என விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

பன்முக தன்மைக்கு அச்சம்

ஒரே நாடு- ஒரே தேர்தல், ஒரே மொழி என்பதெல்லாம், அடுத்த கட்டமான ஒரே ஆட்சி, ஒரே தலைமை, ஒரே மதம் என்கிற பிடிக்குள் கொண்டு செல்லும். மக்களால் தேர்தெடுக்கப்படும் பன்முக தன்மை ஒழிந்து, பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு ஆகியவை பல குழப்பங்களை உருவாக்கி விட்டன. அடுத்து நடக்க உள்ளவை குறித்தும் இப்போதே அச்சத்தை வெளிப்படுத்தி விட்டனர் அரசியல் கட்சிகள். அரசு என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.