ஓணம் பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

 

ஓணம் பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

திருவோணம் பண்டிகையையொட்டி கேரள மக்கள் மற்றும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களை நேசித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல… வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை, விலக்கி இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் ஆகும். அந்த வகையில் ஓணத்தை வரவேற்போம்.

திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. அறுவடைத் திருநாள் என்றும் போற்றப்படும் ஓணம் திருநாளை நமது பாண்டிய நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது குறித்து பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனார் விரிவாக விளக்கியிருக்கிறார். ஓணம் திருநாள் கொண்டாடப்படும் விதம் குறித்து தேவாரத்தில் சம்பந்தரும் விவரித்திருக்கிறார். ஓணம் திருநாள் உழைப்புக்கு கிடைத்த பயனை வரவேற்கும் வகையில் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டங்களுடனும் கழிக்கப்படும் திருவிழாவாகும்.

ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அது நிறைவேறும் வகையில் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிறையவும், மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும் ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓணம் பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும். ‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் அகங்காரத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக இந்த உலகத்திற்குச் சொல்லும் ஓணம், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கைகளையும் வழங்கட்டும். கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்து அனைவரும் முழுமையாக மீண்டெழுந்து ஆரோக்கியத்தோடும், ஆனந்தமாகவும் வாழ்ந்திட பொன் ஓணம் திருநாள் வழிகாட்டட்டும்.

ஓணம் பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னன் மகாபலியின் வரலாறு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் திருநாள் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அந்த 10 நாட்களும் மலையாள மக்களின் வீடுகள் முன் விதவிதமான மலர்களால் பூக்கோலம் போடப்படுவது வழக்கமாகும். திருவோணம் நாளில் 64 வகை உணவுகளுடன் விருந்து படைக்கப்படுகிறது. ஆலயங்களில் வழிபாடு, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், நீரிலும், நிலத்திலும் பல வகையான விளையாட்டுப் போட்டிகள் என விழா களை கட்டும்.

ஓணம் திருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு… ஓணம் திருநாள் கொண்டாட்டத்திற்கான களம். ஓணம் திருநாளின் சிறப்புகளையும், பெருமைகளையும் சங்க இலக்கியங்கள் விரிவாக விளக்கியுள்ளன. ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தி என்பது அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான். அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.