“ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்”

 

“ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்”

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நேற்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர், இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது என தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

“ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்”

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தவறான தகவல் அளித்ததற்காக மத்திய இணையமைச்சர் மீது நடவடிக்கை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தன. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது உண்மை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டது. முறையாக விநியோகம் செய்யவும் சீராக ஆக்சிஜனை வழங்கவும் குழுவும் அமைக்கப்பட்டது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏதும் நிகழவில்லை என கூறினார்.