`மோடி சொல்லிவிட்ட பிறகு கருத்து கேட்பதால் எந்த பயனும் இல்லை!’- புதிய கல்விக்கொள்கையால் கொந்தளிக்கும் பழ.நெடுமாறன்

 

`மோடி சொல்லிவிட்ட பிறகு கருத்து கேட்பதால் எந்த பயனும் இல்லை!’- புதிய கல்விக்கொள்கையால் கொந்தளிக்கும் பழ.நெடுமாறன்

“புதிய கல்வித் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என பிரதமா் மோடி அறிவித்த பிறகு ஆசிரியரிடம் கருத்துக் கேட்பதில் எவ்விதப் பயனும் இல்லை” என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அதிமுக, பாஜகவை தவிர்த்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை, இதற்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் இணையப் பக்கத்தில் சென்று கருத்துக்களை பதிவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சக செயலாளர் அனிதா கார்வால் கடிதம் எழுதியுள்ளார். கருத்துக்கள் தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிபுணர்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “புதிய கல்விக் கொள்கை குறித்து ஒப்புக்காக மத்திய அரசு கருத்து கேட்பு நடத்துகிறது. இந்த கருத்துக் கேட்பு வெறும் கண்துடைப்பு” என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக் கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்டபோது ஆசிரியா் அமைப்புகளும், கல்வியாளா்களும் தெரிவித்த கருத்துகள் எதனையும் அரசு ஏற்கவில்லை. மேலும், புதிய கல்வித் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என பிரதமா் மோடி அறிவித்த பிறகு ஆசிரியரிடம் கருத்துக் கேட்பதில் எவ்விதப் பயனும் இல்லை. மாணவா்களின் எதிா்காலத்தைக் கொஞ்சமும் எண்ணிப் பாா்க்காமல் அவசர அவசரமாக புதிய கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு செய்யும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.