நெல்லை “ஸ்பெஷல்” சொதிக் குழம்பு

 

நெல்லை “ஸ்பெஷல்” சொதிக் குழம்பு

‘ருசி’ பார்த்து சாப்பிடுவதில் நெல்லைக்காரர்களுக்கு நிகர் அவர்களே… இருட்டு கடை தொடங்கி, சொதி குழம்பு வரை அவர்களின் ருசி தமிழகம் அறிந்தததே..

அதிலும், அந்த “சொதிக் குழம்பு” இருக்கிறதே.. அது அவர்களின் நாடி நரம்புகளில் ஊறிய உணவு என்றால் சொதி குழம்பை சொல்லலாம்.
வழக்கமான வீடுகளில் அடிக்கடி செய்யமாட்டார்கள் என்றாலும், விருந்தினர் வந்தால் கட்டாயமாக இடம்பெற்றுவிடும்.

Tirunelveli Sodhi Kuzhambu - Subbus Kitchen

கல்யாண வீடுகளில் சொதி குழம்பு இடம்பெறவில்லை என்றால், அந்த கல்யானவே நிற்கும் அளவுக்கு சண்டை சச்சரவெல்லாம் சாதாரணம். ”சாம்பார் வேண்டாம் சொதிக் குழம்பை விடு” என்று கேட்டு, ஒரு கட்டு கட்டுவார்கள்.

திருமண நிகழ்விற்கு மறுநாள், மணமகன் வீட்டார் சார்பில் நடத்தப்படும் மறு வீட்டு விருந்திலும் சொதிக் குழம்பு பரிமாறப்படும். இப்படிப்பட்ட சொதிக் குழம்பை நெல்லைக்காரர்கள் மட்டுமல்ல, வெளி மாவட்ட உணவு விரும்பிகளும் தயாரித்து விட முடியும்.ம் சொதிக் குழம்பு வாய்க்கு ருசியானது மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட..

100 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து, லேசாக மணம் வரும்படி வறுத்து ஊற வைத்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கால் கிலோ அளவிற்கு கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு,முருங்கைக்காய் ஆகியவற்றை வேறொரு பாத்திரத்தில் வெக வைக்க வேண்டும்.

நெல்லை “ஸ்பெஷல்” சொதிக் குழம்பு

3 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம், சிறிய இஞ்சித்துண்டு எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.சிறிது எலுமிச்சை சாறு, நெய் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்த கட்டமாக தேங்காயை எடுத்து கெட்டியான தேங்காய்ப் பால், பின்பு இரண்டாம் கட்டப் பால், மூன்றாம் கட்டப் பால் என தனித் தனியாக எடுத்துக் கொள்ளவும்.தாளிப்பதற்கு நெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, எடுத்துக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு போட்டு வதக்கவும். அதோடு இரண்டாம், மூன்றாம் கட்டமாக வடித்த பாலை சேர்த்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.

நெல்லை “ஸ்பெஷல்” சொதிக் குழம்பு

அரைத்து வைத்த இஞ்சி, பச்சை மிளகாய் சீரக விழுதை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த 100 கிராம் பாசிப்பருப்பை சேர்க்கவும்
நன்றாக கொதித்த நிலையில் குழம்பு கெட்டியாக குழம்பு வரும் பொழுது முதன் முதலாக எடுத்த தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.

அதன் பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும் கொதிக்க விடக் கூடாது. கொதிக்க விட்டால் தேங்காய்ப் பால் திரிந்து விடும். முடிவாக ஒரு வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.சொதிக் குழம்பு ரெடி. இந்த சொதிக் குழம்பை சாப்பாடு தவிர ஆப்பம், பிரியாணி, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.

இர. போஸ்