பொலிவான சருமம் பெற இதை செய்தாலே போதும்!

 

பொலிவான சருமம் பெற இதை செய்தாலே போதும்!

பொலிவான சருமம் என்பது எல்லோரின் விருப்பமாக உள்ளது. ஆனால், கண்ட கண்ட ரசாயன க்ரீம்களை தடவுவதன் மூலம் தற்காலிகமாக சருமம் பொலிவுடன் காணப்பட்டாலும் சில மணி நேரங்களிலேயே பொலிவிழந்துவிடுகிறது. மேலும், சருமமும் பாதிப்பை சந்திக்கிறது.

இயற்கையான முறையில் சருமம் பொலிவு பெற செய்ய வேண்டியவை பற்றிக் காண்போம்.

பொலிவான சருமம் பெற இதை செய்தாலே போதும்!

சருமம் பொலிவுடன் இருக்க முதலில் செய்ய வேண்டியது தினமும் குறைந்தது ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டியதுதான். தண்ணீர் போதுமான அளவு அருந்துவதன் மூலம் சருமத்தில் வறட்சி நீங்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும். சருமம் மிருதுவாக இருக்கும்.

க்ரீன் டீ அல்லது பிளாக் டீ அருந்துபவர்கள் என்றால் அந்த வெந்நீரில் போடப்பட்ட டீ இலையைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம். டீ டிகாஷனை முகத்தில் தடவி ஐந்து முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். அதில் உள்ள இயற்கை ரசாயனங்கள் சருமத்தைப் பொலிவு பெறச் செய்யும். கண்களைச் சுற்றி கருவளையம், வீக்கம் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

கடலைப் பருப்பு மாவை சருமத்தில் பூசி குளிக்கும் பழக்கம் நம் நாட்டுப் பெண்களுக்கு வழக்கமான ஒன்றுதான். சோப் வருகைக்குப் பிறகு கடலை மாவு பயன்படுத்துவது குறைந்துகொண்டே செல்கிறது. கடலை மாவை சருமத்தில் பூசி வருவதன் மூலம் சூரிய கதிர் வீச்சால் சருமம் பாதிப்படைவது தடுக்கப்படும். இறந்த சரும செல்கள் அப்புறப்படுத்தப்பட்டு சருமம் இயற்கைப் பொலிவு பெறும். கடலை மாவை கிண்ணத்தில் கரைத்து சருமத்தில் பூசி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டுக் கழுவ வேண்டும்.

எண்ணெய்ப் பிசுக்கான சருமம் உள்ளவர் எனில், தக்காளி சாறு பூசலாம். தக்காளியை நன்கு மசித்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தக்காளியில் உள்ள லைக்போபீன் என்ற ரசாயனம் சருமத்தில் ஆன்டிஆக்ஸிடண்டாக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் இயற்கை எண்ணெய் அளவை கட்டுப்படுத்தும். சருமம் விரைவில் முதுமை அடைவது தடுக்கப்படும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் நீங்கும்.

பப்பாளியை நன்கு மசித்து முகத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையடையும். பப்பாளியில் உள்ள பாப்பின் என்ற ரசாயனம் சருமம் மென்மை அடைய உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் பணியையும் பாப்பின் செய்கிறது. சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் கூட பப்பாளியைப் பயன்படுத்தலாம். கால் கப் பப்பாளியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழ சாறு கலந்து சருமத்தில் பூசி 5 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும் இதனால், சருமம் மேலும் மென்மை அடையும்.