கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்குகள்

 

கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்குகள்

லக்னோ: மீரட் மருத்துவக் கல்லூரியில் இருந்த கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்காக சிலரது இரத்த மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆய்வகத்துக்குள் திடீரென குரங்குகள் நுழைந்தன. மீரட் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை தாக்கிய குரங்குகள், அவரது கையில் இருந்த இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிகளையும் பறித்து சென்றன.

அவற்றை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தில் ஏறி குரங்குகள் அமர்ந்து கொண்டன. பின்னர் சாவகாசமாக அந்த இரத்த மாதிரிகளை கடித்துத் துப்பின. இதனால் அந்த குரங்குகளுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் எனவும், அந்த குரங்குகள் வாயிலாக மக்களுக்கு கொரோனா தொற்று பரவி விடும் எனவும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குரங்குகள் இரத்த மாதிரிகளை கையில் வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கூறினர்.