Monday Motivation: கப் முக்கியமா காபி முக்கியமா?

 

Monday Motivation: கப் முக்கியமா காபி முக்கியமா?

திங்கட்கிழமை ஏன் வருகிறது என்பதுதான் பலருக்கு இருக்கும் கவலை. வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு, வார இறுதியில் ஓய்வெடுக்கும்போது புத்துணர்வு கிடைக்கிறது. திங்கட்கிழமை காலை வந்தாலே அந்த புத்துணர்வு எல்லாம் காணாமல் போய்விடுகிறது. மீண்டும் அதே மன அழுத்தம் மிக்க வேலை.

Monday Motivation: கப் முக்கியமா காபி முக்கியமா?

கல்லூரியில் ஒன்றாகப் படித்த முன்னாள் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து தங்கள் பேராசிரியரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். அனைவரையும் வரவேற்ற பேராசிரியர் அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தார். கல்லூரி நாட்கள் பற்றித் தொடங்கிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வேலை, குடும்பம், டென்ஷன், ஸ்டிரெஸ் பக்கம் திரும்பியது. ஒவ்வொருவரும் அவரவர் படும் பாடு பற்றி புலம்பித் தள்ளினர்.

அதற்குள்ளாக காபி தயாராகிவிட்டது என்று பேராசிரியரின் மனைவி கூறினார். அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றார் அந்த பேராசிரியர். அங்கு சாதாரண காபி கப் தொடங்கி விலை உயர்ந்த கப் வரை விதவிதமான அழகான கப்கள் இருந்தன. அவர்களுக்கு பிடித்த கப்பை எடுத்துவந்து காபி பெற்றுக்கொள்ளும்படி அந்த பேராசிரியர் கூறினார்.

அனைவரும் அவரவர் விருப்பம் போல கப்களை எடுத்துவந்து காபி வாங்கிக்கொண்டனர். அனைவர் கையிலும் இருக்கும் கப்களை பேராசிரியர் பார்த்தார்.

“நீங்கள் கொஞ்சம் உங்கள் கைகளில் உள்ள கப்களைப் பார்த்தீர்கள் என்றால் அனைவரும் சிறந்த கப்களை வைத்திருப்பதைக் காணலாம். சாதாரண கப்களை யாரும் எடுக்கவில்லை. எல்லாம் விலை உயர்ந்த, அழகான கப்பாக எடுத்து வந்துள்ளீர்கள். இப்படித்தான் சிறந்ததை மட்டுமே தேர்வு செய்வேன் என்று வாழ்வில் பிடிவாதத்துடன் இருக்கும்போது மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது.

உங்களுக்கு என்ன தேவை… காபி தானே… கப் இல்லையே! அந்த காபியை எந்த கப்பில் குடித்தால் என்ன? இருப்பினும் உங்களுக்கு சிறந்த கப்தான் வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தம் கையில் இருப்பதைக் காட்டிலும் அடுத்தவர் கையில் உள்ள கப் மீதுதான் பார்வை உள்ளது. நமக்கு அந்த கப் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் உள்ளது.

ஒவ்வொருவர் கையிலும் சிறந்த கப் இருக்கும் போது, இன்னும் சிறந்தது வேண்டும் என்ற வேட்கை மட்டும் அதிகமாக உள்ளது.

நம்முடைய வாழ்க்கையும் இந்த காபி போன்றதுதான். நம்முடைய வேலை, பணம், சமூக அந்தஸ்து எல்லாம் இந்த கப் போன்றது. அவை எல்லாம் நம்முடைய வாழ்வை சிறப்பானதாக வைக்க உதவும் கருவிகள் மட்டுமே. அந்த கப் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். காபியை ரசியுங்கள்” என்றார்.

நாமும் நம்முடைய வாழ்வை வாழப் பழகினால் வீண் டென்ஷன், ஸ்டிரெஸ்ஸை தவிர்க்க முடியும்!