ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம்- ஸ்டாலின்

 

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம்- ஸ்டாலின்

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசு என்பது நமது இலட்சியம்! ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளும் அதல பாதாளத்துக்கு போய்விட்டன. விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம் என்பதால் கல்வித்துறை சீரழிவுகளை மட்டும் சொல்கிறேன். புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைக் கொல்லும் கொள்கை! அனைவருக்கும் கல்வி என்பதை சிதைக்கக் கூடியதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சிலர் மட்டும் படித்தால் போதும் என்கிற அளவுக்கு தேர்வுகளைக் கட்டாயமாக்கி, பெரும்பாலான மாணவர்களைப் படிப்படியாக கல்விக் கூடங்களில் இருந்து படிப்படியாக விரட்டத் திட்டமிட்டு இருப்பதுதான் புதிய கல்விக் கொள்கை. இந்தக் கல்விக் கொள்கையை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவ – மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதனைத் தற்கொலை என்று கூடச் சொல்லக் கூடாது. அது மத்திய – மாநில அரசுகள் நடத்திய கொலைகள்.

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம்- ஸ்டாலின்

அந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்தது. கோச்சிங் செண்டர்களில் லட்சங்களைக் கட்டிப் படிப்பவர்களால்தான் வெற்றி பெற முடியுமானால், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட பட்டியலினப் பிள்ளைகள் எப்படி மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியும்? இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை. தி.மு.க.வின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமை இப்போது கிடைத்துள்ளது. இதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தார் முதலமைச்சர். அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் நாம் செய்து அந்த மசோதாவுக்கு ஆளுநரின் அனுமதியை வாங்கித் தந்தோம். மத்திய அரசுடன் துணிச்சலோடு மோதுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை! இதேபோல் இன்னொரு துரோகத்தையும் மத்திய – மாநில அரசுகள் செய்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இந்த வருடம் அப்படித் தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது. இதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட முக்கியமாக மத்திய அரசு நியமித்த குழுவில், இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அரசு சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட இரட்டைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்தது. சமூகநீதி விஷயத்தில் அ.தி.மு.க. அரசு ஆடிய பொய்யாட்டங்கள் தான் அதிகம்.

இதுதான் தமிழினத்துக்குச் செய்த மாபெரும் துரோகம் ஆகும். மத்திய அரசைக் கேள்வி கேட்டால், அவர்கள் நமது கொள்ளையைத் தடுப்பார்கள்; நம் மீது வழக்குகள் பாயும் என்பதால் கைகட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்து கொண்டு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களையும் பற்றிச் சொன்னால் பல மணிநேரம் பிடிக்கும். அ.தி.மு.க. அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகக் காட்ட வேண்டிய நபர் தான் ராஜேந்திர பாலாஜி! எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் – இன்னும் சொன்னால் ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் இருக்கிறது. எனக்கே கொலை மிரட்டல் விடுக்கிறாயா என்று சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கேட்கும் அளவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டிக் கொண்டு இருக்கிறார். ஆளும் கட்சி சார்பாக, விருதுநகர் மாவட்டத்தை மட்டுமல்ல, அ.தி.மு.க. சார்பில் அரட்டல் உருட்டல் செய்வதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வந்து கொண்டு இருக்கிறார். வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம்- ஸ்டாலின்

அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவர் எந்த வார்த்தையை எல்லாம் பயன்படுத்தக் கூடாதோ அந்த வார்த்தைகள் அனைத்தையும் தனது பேச்சுகள், பேட்டிகளில் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்து போன பிறகு, தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார். இன்றைய அ.தி.மு.க.வுக்குள் பா.ஜ.க. அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள். பா.ஜ.க. தன்னை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில் தான் ராஜேந்திரபாலாஜி இப்படி செயல்பட்டு வருகிறார். தினமும் மைக்கை பார்த்தால் ஏதாவது உளறும் ராஜேந்திர பாலாஜி, என்றைக்காவது தனது துறையைப் பற்றி பேசி இருக்கிறாரா என்றால் இல்லை. ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லி இருக்கிறாரா? பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை வாயைத் திறந்துள்ளாரா? சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஆவின் நிறுவனம் சந்தித்ததால் அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து அமைச்சரின் பதில் என்ன?

மதுரையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் துர்நாற்றம் பிடித்து இருந்ததாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்தார்களே. அதற்கு அமைச்சரால் பதில் தர முடியுமா? மதுரை மாவட்ட பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதா? மதுரை மாவட்ட மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இவரது பதில் என்ன? நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால்விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியதுதான் இவர் இந்தத துறையைக் கவனிக்கும் இலட்சணமா? ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்தபணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் என்ன? விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள் நடந்திருப்பதற்கு அமைச்சரின் விளக்கம் என்ன? மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாருக்கு பதில் என்ன?

மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டுக்கு காரணமானவர்களை காப்பாற்றியது யார்? இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகளுக்கு யார் காரணம்? ஆவின் பால் பைக்கான பாலிதீன் பிலிம் கொள்முதல் முறைகேட்டால் பலன் அடைந்தவர்கள் யார்? தென்மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றியது யார்?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.