“ஆஜராக நான் தயார்… எடப்பாடி தயாரா” – எடப்பாடி மண்ணில் ஸ்டாலின் நேரடி சவால்!

 

“ஆஜராக நான் தயார்… எடப்பாடி தயாரா” – எடப்பாடி மண்ணில் ஸ்டாலின் நேரடி சவால்!

தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் படு பிஷியாக இருந்தன. குறிப்பாக திமுகவும் அதிமுகவும். தேர்தலுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இதனால் தேர்தல் பிரச்சாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் நேற்றே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி விமர்சித்துவருகின்றனர்.

Image

தந்தையின் சொந்த ஊரான திருவாரூரிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின், இன்று சேலத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். கைகொடுப்பது, இளநீர் வெட்டி கொடுப்பது என அவரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தற்போது வீரபாண்டி, ஏற்காடு பகுதிகளில் வாக்கு சேகரித்துவருகிறார். பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், “ஜெயலலிதா மரணம் குறித்து எங்கள் மீது அவதூறு பரப்புகிறீர்கள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக நான் தயார்; நீங்கள் தயாரா” என்று சவால் விடுத்துள்ளார்.

Image

முன்னதாக ராணிப்பேட்டையில் திமுக எம்எல்ஏ காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தை இதேபோன்ற முறையில் விமர்சித்திருந்தார். அதாவது விசாரணை ஆணையம் கேட்ட ஓபிஎஸ் ஏன் இன்னும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று கேள்வியெழுப்பினார். இதை வைத்துப் பார்க்கையில் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை தேர்தல் வியூகமாக எடுத்திருப்பது தெரியவருகிறது. அதிமுகவை விட ஜெயலலிதாவை அதிகமாக திமுக முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறது.