சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு பிரிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு பிரிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கருப்பு பூஞ்சை நோய்க்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர். அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்கள் தங்கி சிகிச்சை பெற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு பிரிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசிய அவர், இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வரவிருப்பதால் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் வந்தவுடனே, மக்கள் தொகையின் அடிப்படையில் மாவட்ட வாரியாக தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும். மொத்தமாக மத்திய அரசிடம் இருந்து 42 லட்சம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 22 லட்சத்தை மத்திய அரசே அதன் தொகுப்பிலிருந்து வழங்கும். மீதமுள்ள தடுப்பூசியை 18 – 45 வயதினருக்கு செலுத்துவதற்காக தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்று கூறினார்.

மேலும், அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது மக்கள் நலவாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.