தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள், பொருளாளர், மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளில் அரசு எப்போதும் தலையிட்டது இல்லை. பல ஸ்கிரீன் கொண்ட பெரிய திரையரங்குகளை இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது. அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதத்திலேயே கொரோனா தமிழகத்தைவிட்டு ஓடிவிடும். மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு தமிழகத்தில் கொரோனா இல்லாமல் போகும்” எனக் கூறினார்.