வேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை… முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

 

வேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை… முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

தேனி

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 51 அடியை எட்டியதை அடுத்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. 57 அடி மொத்த கொள்ளளவு கொண்ட அணை, மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மழைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 205 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது.

வேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை… முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

இதனையடுத்து, மஞ்சாளாற்றின் கரையோர பகுதிகளான தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு பொதுப் பணித்துறையினர் முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53 அடியாக உயரும் போது 2ஆம் கட்ட வெள்ள எச்சரிக்கையும், 55 அடியாக உயரும்போது மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.