நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ள மதுரை இயற்கை விவசாயி!- எதற்காகத் தெரியுமா?

 

நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ள மதுரை இயற்கை விவசாயி!- எதற்காகத் தெரியுமா?

“நான் பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கைலாசா தேசத்தில் மதுரை மக்களுக்கு முன்னுரிமை தருவதாகக் கூறியதற்கு இணங்க அந்த தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தர வேண்டும்” என்று நித்யானந்தாவுக்கு மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் இந்த நடவடிக்கை பேசும் பொருளாக மாறியது. இதனிடையே, மதுரையை சேர்ந்த ஓட்டல் அதிபர் குமார், தனது டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஒப்புதல் அளித்த நித்யானந்தா, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே, “டெம்பிள் சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவது மட்டுமில்லாமல், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்தியானந்தாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். இதனால் பதறிப்போன ஓட்டல் அதிபர் குமார், காமெடிக்காக நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியதாக அந்தர் பல்டி அளித்தார். மேலும், “கைலாசாவில் ஒட்டல் நடத்தும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை. என்னுடைய கடிதத்திற்கு நித்யானந்தாவிடம் பதில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் நான் அவ்வாறு கடிதம் எழுதினேன்” என்று பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இந்த பிரச்னை அடங்குவதற்குள் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளேன். பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கைலாசா தேசத்தில் மதுரை மக்களுக்கு முன்னுரிமை தருவதாகக் கூறியதற்கு இணங்க அந்த தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தருமாறு கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.