4 மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம்!

 

4 மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம்!

தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. அதனால் கொரோனா அதிகமாகப் பரவி வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை, மதுரை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பொது முடக்கம் அமலாக வாய்ப்பு இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.

4 மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம்!

இந்த நிலையில் மதுரையில் மாவட்டத்தில் நாளை நள்ளிரவு முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், பரவை டவுன் பஞ்சாயத்து, திருப்பரங்குன்றம் பகுதியிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயங்கலாம் என்றும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் டீக்கடைகள் திறக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பணி இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கி இருந்தால் அந்த கட்டுமான பணிக்கு அனுமதி அளிப்பதாகவும் உணவு டெலிவரி, உணவகங்களில் பார்சல் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், ரேஷன் கடைகள் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 705 ஆக உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.