செரிமான குறைபாட்டைப் போக்கும் பிரியாணி இலை!

 

செரிமான குறைபாட்டைப் போக்கும் பிரியாணி இலை!

அடிக்கடி பிரியாணி, பிரிஞ்சி செய்கிறோமோ இல்லையோ, பிரிஞ்சி/பிரியாணி இலை மட்டும் நம் வீட்டு சமையல் அறையில் நிச்சயம் இருக்கும். பிரியாணி, பிரிஞ்சி, குருமா, வடைகறி போன்றவற்றில் பிரியாணி இலையை பயன்படுத்துவோம். மற்றபடி அதை பொருட்படுத்தவே மாட்டோம். அந்த பிரியாணி இலை வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, மருத்துவ தன்மையும் கொண்டது என்று அதிர வைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

செரிமான குறைபாட்டைப் போக்கும் பிரியாணி இலை!

பிரியாணி இலையில் ஆன்டி ஆக்சிடண்ட், வைட்டமின் ஏ, சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ளதாம். அதனால்தான் என்னவோ பிரியாணியில் அதிக அளவில் பிரியாணி இலை பயன்படுத்தப்படுகிறதோ என்னவோ.

பிரியாணி இலையைக் கொண்டு தேநீர் தயாரித்து அருந்தினால் உடலுக்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரியாணி இலை டீ தயாரிப்பது எப்படி?

ஒன்று அல்லது இரண்டு பெரிய பிரியாணி இலை

1 பெரிய சைஸ் பட்டை

1.5 முதல் 2 கப் வரை தண்ணீர்

அரை எலுமிச்சை, தேவை எனில் தேன்.

பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடானதும் அதில் பட்டை மற்றும் பிரியாணி இலையை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு 4-5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் அதை வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விட்டு, தேவை எனில் தேன் சேர்த்து அருந்தலாம்.

இந்த பிரியாணி இலை தேநீர் செரிமானத்தைத் தூண்டும், ஒற்றைத் தலைவலி பிரச்னைக்கு தீர்வு அளிக்கும். இதில் பட்டை சேர்ந்திருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கும்.

இதில் உள்ள மூலக்கூறுகள் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கத் தூண்டும் ஐபிஎஸ் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். உடலில் உள்ள மன அழுத்தத்துக்கான கார்டிசோல் உள்ளிட்ட ஹார்மோன்கள் அளவைக் குறைக்க இது உதவும். உடலில் செல்களில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். செரிமான மண்டலத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கே நன்மை செய்யும்.